சீர்ப்புலிநாடு -இரா.கோமகன்

தமிழக மன்னர்கள் தங்கள் இயற்பெயரைக் காட்டிலும் விருது பெயரால் அழைக்கப்படுவதை உயர்வாகக் கருதினார்கள். அவ் விருது பெயர்கள் பெருமைக்குரிய செயல்களின் விளைவாக அமைகின்றன. வரலாற்றின் தொடர்ச்சிப் பொருட்டு விருதுப் பெயர் சொல்லாடல்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, இராஜேந்திரசோழனின் முடிகொண்டான், கங்கை கொண்டான், கடாரங்கொண்டான் என்னும் விருதுப் பெயர்களை கூறலாம்.

அப்படியே தம் குறுநில மன்னர்கள், படைத்தலைவர்கள் அரசதிகாரிகளுக்கு வெற்றியின் பெருமைமிகு விருதுப் பெயர்களை வழங்கியுள்ளனர். இது அரசாட்சி அதிகாரத்தில் அவர்களுக்கு இருந்த பங்கை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. அன்றைய அரசமைப்புக்கு அது தேவையாக இருந்தது. நடுவணாக பேரதிகாரம் திரட்சிக் கொண்ட பொழுது அப்பேரதிகாரம் அரசு செயல்பாட்டில் மட்டும் உறுதிபட்டது. ஆட்சிச் செயல்பாட்டில் அதன் மேலாண்மை மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த காலத்தில் இவ்விருது பெயர்கள் சிறப்புற்றிருந்தது.

குறுநில மன்னர்கள்பகுதி தலைவர்கள் அரசு அதிகாரிகளாகப்பட்டு விருது பெயருக்குரிவர்கள் பணி அமர்த்தப்பட்டனர். அரசின் உறுப்பாகி அரசு செயல்பாட்டில் ஆட்சி மேலாண்மை நிலைக்கு வந்தனர். பல குடிகள் ஆட்சி மேலாண்மையில் விருது பெயர் கொண்டு புத்தெழுச்சி பெற்றனர். விருதுப் பெயர்கள் படை எழுச்சிகளோடு வெற்றிகளுடன் தொடர்பு கொண்டிருந்தன. இந்நிலை சோழர்களின் காலத்தில் பேரேழுச்சி கொண்டிருந்தது. சோழ அரசின் பல நிலை அதிகாரிகள் அவர்கள் தொடர்புடைய பகுதி, குலம் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விருது பெயரைப் பின்னுட்டமாக பெற்றுச் செயல்பட்டனர். பல்லவரையர், வானதரையர், கச்சியரையர், மழவரையர், சம்புவரையர், அங்கரையர், சீர்ப்புலியர், முத்தரையர், இருங்கோவேள், இருக்குவேள் எனப் பல விருதுப் பெயர்களைச் சுட்டலாம்.

முதலாம் பராந்தக சோழர் காலத்தில் சோழ ஆட்சி எல்லை விரிவாக்கம் தீவிரப் படத்தொடங்கியது. இதன்படி வேங்கியை ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னர் இரண்டாம் பீமாவுக்கு எதிரான போரில் அதன் தென் பகுதியான தற்போதைய நெல்லூர் மாவட்டம் உட்பட்ட சீர்ப்புலி இந்நாட்டை சிறுகளத்தூர் உடைய பராந்தக மாறன் பரமேசுவரன் வென்று நெல்லூரை அழிக்கின்றார். (K.A.Neelakandashastri-1955)

சீர்ப்புலிநாடு தற்போதைய ஆந்திரா மாநிலத்தின சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி வட்டாரத்தில் உள்ள சீர்ப்புலி எனும் நகரைஅடிப்படையாக கொண்டு விளங்கிய நாடாகக் கருத முடியும். (V.Rangacharya-1919) ஆந்திராவின் கடற்கரையை ஒட்டிய நெல்லூரோடு அதன் தென்பகுதியை உள்ளடக்கிய கடப்பா முதலான மாவட்டங்களைக் கொண்ட. பகுதியாக சீர்ப்புலி நாட்டைக் கூறலாம்.

சீர்ப்புலி நாடு வரலாறு நெடியது. சங்ககாலத்தின் வரலாற்றுப் பக்கங்களில் இதற்கு இடம் உண்டு. வேங்கடம் இந்த நிலப்பரப்பில் தான் உண்டு. வேங்கடத்தை திரையன் என்னும் மன்னன் ஆண்டக் குறிப்புகள் சங்கப்பாடல்களில் கிடைக்கின்றன. காஞ்சியை இவன் இளையோன் இளந்திரையன் ஆண்டிருக்கின்றார்.(மா.இராசமாணிக்கனார்- 1948) இவர்கள் தொண்டையர்கள். தொண்டைநாடு சங்ககாலத்தில் அருவாநாடு என்று அழைக்கப்பட்டது. அருவா வடதலை, அருவாநாடு என இரு பிரிவாக பேசப்பட்டது. அம்மக்கள் அருவாளர்கள் என அழைக்கப்பட்டனர். பவித்திரி என்னும் பெருமை மிகு ஊரை கொண்டு ஆண்டிருக்கின்றனர். (மா.இராசமாணிக்கனார்-1948). இன்றைய ரெட்டிப்பாளையம் அன்றைய பவித்திரியாக கருதப்படுகிறது.

வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை.(அகம்:85-9) செல்லா நில்லிசை பொலம்பூண் திரையன் பவித்திரி அன்ன நலம். (அகம்:340-6) நீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம்புரி செங்கோல் பல்வேல் திரையன்(பெரும்பாணாற்று:37). வினை நவில் யானை விறற் போர்த் தொண்டையர்/இனமழைத் தவழும் ஏற்று அரு நெடுங்கோட்டு/ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்(அகம்:213,1-3) எனும் சங்கப்பாடல் வரிகள் திரையன் பொருட்டும் தொண்டையருக்கும் சான்றாகின்றன. (மா.இராசமாணிக்கனார்-1948)

பிற்காலச் சோழர் கல்வெட்டுகளில்கூட பவித்திரி கூற்றம் கடல் கொண்ட பவித்திரி கூற்றம் என்று தொடரும் அளவுக்கு அவ்விடம் பழம்பெருமை கொண்டதாக இருந்தது. ஆந்திராவின் குடூர் தாலுக்கா ரெட்டிப்பாளையம் பாண்டுரங்கன் கோவில் கல்வெட்டுகள் செயங்கொண்டசோழமண்டலத்து எனவும் இராசேந்திர சோழமண்டலத்து பவ்வத்திரி கோட்டத்துபெறுநர்நாடு, கடல் கொண்ட பவித்திரி கோட்டத்து காகந்தி நகர் எனும் கற்பொறிப்புகள் உண்டு(Alan Butterworth & Venugopaulchetty-1905)

களப்பிரர் காலத்தில் பல்லவர்கள் ஆந்திரப் பகுதிக்கு நகர்ந்தனர். நான்கு இடங்களை தலைமையாக கொண்டு ஆண்டனர். தம்பிரபா, தாசனபுரா, பாலக்கடா, மென்மதுரா ஆகியவை அவை. இன்று அவை எப்பெயரில் மாற்றம் கொண்டிருக்கின்றன என்பது அறுதியிடாத உரையாடலாகத் தொடருகிறது. பிராக்கிருதத்திலிருந்து சமஸ்கிருதத்தில் எழுத தொடங்கினர்.(Gazetteer of the Nellore dist-1942)

சிம்மவிஷ்ணு காலத்தில் தொண்டை மண்டலம் களப்பிரர் அகன்ற ஆட்சியைக் கண்டது. பல்லவர்கள் தென்திசை ஏக ஆந்திரப் பகுதியில் சாளுக்கியர் அதிகாரம் பெருகியது. இப்பகுதியில் அதிகாரம் மாற்றம்மாறிமாறி அமைந்தாலும் பல்லவர்கள் வலுக்குன்றியே இருந்தனர்.

நெல்லூர் பகுதி நெல் வேளாண்மை அதிகம் இருந்ததால் நெல்லூர் என பெயர் வந்தது. சிம்மபுரம் எனவும் வழங்கப் பட்டிருக்கிறது. நெல் விளையும் பூமி என்பதற்கு அகப்பாடலே சான்று. நனைமுதிர் நறவின் நாட்பலி கொடுக்கும்/ வால்நிணப் புகவின் வடுகர் தேஏத்து.(அகம்:213) வடுகர் கள்ளை அரசியில் ஊறவைத்து கொடுப்பார், ஆநிரை கவருவார் என்பதும், அப்பகுதியை கடந்ததும் கடும் வெய்யில் காயும் என குறிக்கிறது. ஆநிரை அதிகம் உள்ள பகுதி எனவும் உணரலாம்.

இந்தியா முழுவதும் மிகப் பெருமை உடைய நெல்லூர்மாடு ஓங்கோல்மாடு என அழைக்கப்படும் கால்நடைகள் மிகப்புகழ் பெற்றவை. உள்நாட்டில் மட்டும்மல்ல, மலேயா, ஜாவா. நிக்கோபார், ஜமைக்கா, அர்ஜன்டீனா இந்த வகைக் கால்நடைகள் ஏற்றுமதி ஆகியுள்ளன. இதனால் உள்நாட்டு சந்தை பாதிக்கப்பட்டதால் அரசு இதற்கு தடையாணை வழங்கியது. இன்றும் அது நடைமுறையில் உள்ளது.(Nellore dist Gazetteer-1942)

கால்நடை பெருக்கமும் சீர்ப்புலி நாட்டில் நிறைந்திருந்தது என்பது ஆநிரை கவரும். சங்கப் பாடலோடு சோழர்கள் காலத்தில் ஆடுகளைக் கவர்ந்து வந்த செய்தியை உறுதிப்படுத்துகிறது.

சோழர் காலத்தில் சீர்ப்புலி நாட்டின் மீது இரண்டு முறை போர் நடைபெற்று இருக்கிறது. முதற்போர் முதலாம் பராந்தகன் காலத்திலும் இரண்டாவது போர் முதலாம் இராசராசன் காலத்திலும் நடைபெற்றிருக்கிறது. (Dr.K.A.Neelakandasastri-1955) சிப்புலிநாடு, பாகநாடு ஆகியவற்றை வென்று நெல்லூரை எரித்த செய்தி கல்வெட்டுகளில் பதியப்பட்டு இருந்தாலும் சீர்ப்புலி நாட்டைப் பற்றிய விரிவானநிறைவான எடுத்துரைப்புகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. சீரும்புலி எனும் பொருளில் சீர்ப்புலிநாடு எனப் பெயர் வழங்கியிருக்க வேண்டும் என்பது மேல்பாடு செப்பேட்டில் உள்ள நின்ற நிலையில் சீரும் புலியின் குறியீடு கொண்டு உணராலாம். சோழக் கல்வெட்டில் சிப்புலி, சிட்புலி என் குறிக்கப்பட்டிருக்கிறது. சீப்புலியில் கிட்டும் கன்னடக் கல்வெட்டு சீர்ப்புலி என விளிக்கிறது.(V.Rangacharya-1919)

சீர்ப்புலிநாடு, பாகநாடு புவி எல்லைகளை வரையறுப்பதற்கு முன்பாக உதயேந்திரம் செப்பேட்டில் வேகவதி ஆற்றுக்குரியவனும்வில்வலம்ஊருடைய பூசான் குலத்துதித்தவனுமான உதயசந்திரனுடைய வடபுலத்து வெற்றியைக் குறிக்கும் பகுதிகளைப் பற்றிய வரையறை உறுதிசெய்யப்படவேண்டும். உதயேந்திரம் செப்பேட்டில் உதயச்சந்திரன் வடபுலத்து வெற்றியைக் குறிக்கும் பகுதியில்,(E.Hultzch-1892)

1) வடதிசையில் புகழ் அடைவதற்கு உதயச்சந்திரன் நிஷாதிபதியான பிருதிவி வியாக்கிரனை அஸ்வமேதயாக குதிரையைப் பின்தொடர்ந்து செல்வது போல தொடர்ந்து சென்று வெற்றிகண்டான்.

2)விஷ்ணுராஜனுடைய நாட்டினின்றும் பல்லவனை மதிப்புறச் செய்ய ஆணையிட்டான்.

3)நிரவத்யன் முதலியவர்களைவென்றுடக்கி சாந்தி வீசும் முத்துமாலைகளையும் அளவற்றப் பொற்குவியலையும் யானைகளையும் கைப்பற்றினான் என்ற செய்தி குறிப்பிடப்படுகிறது.

இதில் நிஷாதிபதி பிரிதிவி வியாக்கிரன் யார் என்பது தெளிவு கொள்ள வேண்டும். இதுபற்றி வேறு கருத்தாக்கங்கள் உண்டு(பல்லவ செப்பேடுகள் முப்பது-1999)

டாக்டர்ஹுல்ஸ் பின்வருமாறு கூறுகிறார், வடதிசையில் புகழ் பெற வேண்டும் என்று அஸ்வமேத குதிரையின் பின் ஓடிக்கொண்டிருந்த நிஷாத(வேடர்) தலைவனை பிருதிவி வியாக்கிரனைத் தொடர்ந்து சென்று வெற்றி கொண்டதோடு, விஷ்ணுராஜனுடைய நாட்டினின்றும் வெளியேற அவனுக்கு ஆணையிட்டு அந்நாட்டை பல்லவனுக்கு அடிமைப்பட்டதாக செய்து பொன் பொருள் கொண்டான் என்றகிறார். டாக்டர் என். வெங்கடராமணையா, நந்திவர்மன் அஸ்வமேதம் செய்து உதயச்சந்திரனை அனுப்பினான். நிஷாதிபதியான பிரித்திவி வியாக்கிரன் நெல்லூர் மாவட்டத்திலுள்ள உதயகிரி பிரதேசத்தில் வாழ்ந்து வந்த போயர் எனும் மக்களின் தலைவன் என்றும் அவன் வேங்கி சாளுக்கியருக்கு அடங்கியவன் என்றும் உதயசந்திரனோடு அவன் நடத்திய போரில் தோற்றத்தின் விளைவாகவே நெல்லூர் மாவட்டம் அடங்கிய ஆந்திரப் பிரதேசம் வேங்கியின் ஆட்சியிலிருந்து பல்லவர்களுக்கு மாறியது என்றும் கருதுகிறார். நிரவத்யன் என்பது ஒருவருடைய பெயர் ஆகும்.ஆயினும் எவருடைய இயற்பெயரும் அன்று சாளுக்கிய மன்னர்களில் சிலர் தரித்திருந்த விருதுப்பெயர் ஆகும். வேங்கி சாளுக்கிய இரண்டாம் ஜெயசிம்மனும் வாதாபியின் விஜயாதித்தனும் இநத விருதுப்பெயர் புனைந்திருந்தனர். இவ்விடம் குறிக்கப்படும் நிரவத்யன் வாதாபி சாளுக்கியன் விஜயாதித்தன் ஆக இருக்க வேண்டும் என்கிறார்.

தமிழக வரலாற்றுக்கழகத்திற்கு பல்லவர் செப்பேடுகள் முப்பத்தைத்தொகுத்த தி.நா.சுப்ரமணியம் சாசனத்தில் பிருத்திவி நிஷஷவதி என்று குறிப்பிடப்பட்டுள்ளான். அதை நிஷாத என்று மாற்றி அவனை வேட்டுவத் தலைவனாக ஆசிரியர் கொள்வர். அதற்குப் பதிலாக நிஷய என்ற பொருள் கொண்டால் அவன் நிஷத நாட்டு மன்னன் அரசனாவான். நிஷத நாட்டு அரசன் என்று புராணப்புகழுடைய நள மகாராஜன் வம்சத்தில் தோன்றியவர்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் கல்வெட்டுகள் விதர்ப்பத்திற்கு கிழக்கே மகேந்திரமலைப் பகுதி கோரப்பட்டுசீமையில் கிடைத்துள்ளன. அதாவது பெல்லாரி, கர்நாடகா, கர்னூல் மாவட்டங்களை ஒட்டிய பகுதி முன்னாள் நளவாடி என்று சொல்லப்பட்டது. இதன்படி உதயசந்திரன் வென்றது நிஷாதிபதியான பிருத்திவி வியாக்கிரன் நள வம்சத்தைச் சேர்ந்த மன்னனாக இருக்கவேண்டும். அவர்கள் ஆட்சி செய்தநாடு வேங்கியின்நாட்டை ஒட்டி இருந்தது. நிஷத அரசனான பிருத்திவியாக்கிரன் சாளுக்கிய ஆதிக்கத்துக்கு உட்பட்டவன் எனக் கருதுகிறார்.(பல்லவச்செப்பேடுகள் முப்பது-1999)

தென்னிந்தியக் கல்வெட்டு மடலம் மூன்றின் பாகம் நான்கில் திருவெற்றியூர் கல்வெட்டுக் குறிப்புகளில் சீர்ப்புலி நாட்டைப் பற்றி கூறும் பொழுதுவியாக்கிரன் என்பது புலியை குறிக்கிறது பிரித்திவி வியாக்கிரன் சீர்ப்புலியாக இருக்கலாம் என ஹூல்ஸ் கூறுகிறார் (H.Krishnasastri-1920)

டாக்டர்.ஹுல்ஸ், டாக்டர்.வெங்கடரமணய்யா, தமிழர் வரலாற்றுக்கழகம் ஆகிய மூன்று கூற்றுகளில். வெங்கட்ரமணய்யாவின் கருத்து மெய்த்தன்மையுடன் நெருக்கமாக உள்ளது. போயர்கள் நிஷாதா என வழங்கப்பட்டனர். இவர்கள் வால்மிகி வழித்தோன்றலாக அறியப்படுபவர்கள். போயர் நிலம் நெல்லூரின் வடக்கு திசையில் வட மேற்குப்பகுதியிலும் பிரகாசம் மாவட்டத்தில் தென்திசையில் தென்மேற்குப் பகுதியையும்அதாவது 70’80.5” கிழக்கு14.5’55.5” வடக்குநில எல்லைக்குள் அடங்கும்.(K.Sathiamoorthy-1991)வேங்கிக்கு தென் எல்லையாக இருந்து நிஷாதிபதி பிரித்திவி வியாக்கிரன் அப்பகுதியை ஆதிக்கம் கொண்டிருக்கவேண்டும். அவர் சாளுக்கிய சிற்றரசாக இருந்ததால் வெல்லப்பட்டதோடு சாளுக்கியரையும் அடிபணிய வைத்தார்உதயச்சந்திரன் எனப் பொருள் படுகிறது.

அப்பகுதி நீங்கலாக நெல்லூர், கடப்பா, சித்தூர் பகுதிகளை கொண்டு சீர்ப்புலி நாடு விளங்கியது. தெற்குக் கடப்பா பகுதியும் நெல்லூர் மாவட்டத்தில் வடபகுதியும் சேர்ந்து பாகநாடு என அழைக்கப்பட்டது. அப்பகுதியை பல்லவ கரிகால வழித்தோன்றலாக அறிவித்துக்கொண்ட தெலுங்குச் சோழர்கள் ஆண்டனர்.

தெலுங்கு சோழர்கள் தங்களை தொண்டைமான் தொடர்புடைய சோழர்களாக அறிவித்து சூரியகுல(சோழர்) காஷ்யப்ப கோத்திரம் வழித்தோன்றலாகக் கூறிக்கொண்டனர். எட்டாம் நூற்றாண்டு இடைக்காலத்தைச் சேர்ந்தமேல்பாடுசெப்பேடு தெலுங்கு சோழர்களைப்பற்றி குலவழி வரலாற்றை தெளிவாக விளக்குகிறது.(E,Hultzsch-1912) மேல்பாடு செப்பேடு புண்யகுமாரன் என்னும் மன்னரின் ஐந்தாம் ஆண்டில் வழங்கப்பட்டக் கொடையைப் பற்றிக் கூறுகிறது. இச்செப்பேட்டில் குறிக்கப்படும் சோழமகராசன் புண்யக்குமாரன் தான் சீர்ப்புலி நாட்டை ஆண்டு தனக்கான பூசலில் குத்தப்பட்டு இறந்த பரசுராமனுக்கு சீர்ப்புலியில் நடுகல் வைத்தவர். இவர் காலம் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாக கணிக்கப்படுகிறது.

சீர்ப்புலியில் நான்கு கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதில் நடுகல் ஒன்று சீர்ப்புலிநாட்டை ஆண்டவர் பற்றிய செய்தியைக் கூறுகிறது.இது கன்னடமொழியில் உள்ளது. சீர்ப்புலிநாட்டை ஆளும் போர்முகராமன் புண்யகுமாரனை எதிர்த்து இந்திரலா என்பவன் கலகம் செய்ததையும் அவனை எதிர்த்த பூசலில் பரசுராமன் என்பவர் குத்துபட்டு இறந்து விடுகிறார் அவருக்கு எடுக்கப்பட்ட நடுகல் சீர்ப்புலிநாட்டை ஆண்டது புண்யகுமாரன் எனும் செய்தியை அளிக்கிறது.(Alan Butterworth and Venugopaulchetty- 1905&ARE.No.299 0f 1905)

இவரின் ஆட்சிப்பகுதிசித்தூர், கடப்பா முதல் நெல்லூர் பகுதி வரையிலும் பரவியிருந்தது. இதுதான் சீர்ப்புலிநாடாகக் கருதமுடியும். சீர்ப்புலிநாடு தெலுங்குச் சோழர்களால் ஆளப்பட்டிருக்கிறது. இவர்கள் பல்லவர்-சோழர் வழித்தோன்றலாக கூறிக்கொண்டாலும் கீழைச் சாளுக்கியர்களுக்கு அடங்கிவர்களாகவும்  இருந்திருக்கின்றனர்.

சீர்ப்புலிநாட்டையும் பாகநாட்டையும் முதலாம் பராந்தகன், முதலாம் இராஜராஜன் காலத்தில் வெல்லப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. (சதாசிவ பண்டாரத்தார்-1958) முதலாம்பராந்தகனின் 34-ஆம் ஆட்சி ஆண்டாகிய கி.பி. 941-ல் அவரின் படைத் தலைவன் தென்கரை சிறுகளத்தூர் உடையான் பராந்தகன் மாறன்பரமேசுவரனான செம்பியன் சோழியவரையன் சீர்ப்புலிநாடு பாகநாடு எறிந்து நெல்லூர் எரித்துக் கொண்டு வந்த சாவாமூவா பேராடுகளை நுந்தா விளக்கு எரிக்க 90 வைத்த செய்தி கூறும் திருவெற்றியூர் கல்வெட்டு உள்ளது.(SII.Vol.-III Part-III.No.109)

மீண்டும் முதலாம் இராசராசன் காலமான கி பி 991ஆம் ஆண்டு தஞ்சாவூர் கூற்றத்து குருகாடியுடையான் பரமன் மழப்பாடியான மும்முடிச்சோழன் தலைமையில் படையெடுப்புகள் நடந்திருக்கிறது. இதுபற்றியக் குறிப்பை காஞ்சிபுரத்தில் உள்ள இவரது ஆறாம் ஆட்சியாண்டு கல்வெட்டு இராசராசனின் அமைச்சர்கள்கோன் வீதிவிடங்கன் என்னும் வில்லவன் மூவேந்த வேளாண் ஆர்வலக்கூற்றத்து உத்திரக்குடியான்பத்துநுந்தாவிளக்கு எரிக்க குருகாடியான் சீர்ப்புலியும் பாகநாடும் எறிந்து கொணர்ந்த900 ஆடுகளை கச்சிப்பேடு ஐந்சந்தி துர்க்கை பட்டாரிகிரியாருக்கு வழங்கிய செய்தி உள்ளது.(G.V. SrinivasaRao-1952)

முதலாம் பராந்தகன் காலத்தில் இராசாதித்தன் வீழ்ந்தபின் சீர்ப்புலிநாடும் பாகநாடும் இராஷ்டிரகூடர், சாளுக்கியர் ஆதிக்கத்திற்குள் போயின. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இராசராசன் காலத்தில் சோழர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. சீர்ப்புலி,பாகநாடு எறிந்தது தெலுங்கு சோழர்களை அடக்குவற்காக என எடுத்துரைப்பது பொருத்தமாகும்

கிருஷ்ணா நதியின் தென்கரை பகுதியான வேலநாடு ஆயிரத்தை ஆண்ட தெலுங்கு சோழக் குலக்குழு கோட்டா பிற்காலத்தில் 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி தொடங்கி 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஆண்டவர்கள். இவர்களின் தனஞ்சய கோத்திரத்தில் வந்த பெத்தாகோட்டா(கி.பி.1050-1091) குலத்து முதல் அரசராகஅறியப்படுகிறார்.(Yashodha Devi-1993) அவ்வழியில் வந்த இரண்டாம் பீமா மிகவும் புகழ்பெற்ற அரசனாக விளங்கியுள்ளார். அக்காலத்தில் வேலநாடு சோழர்களுக்கும் தெலுங்கு சோழர்களுக்கும் கடும் பகை நிலவியது. சீர்ப்புலிகொண்டான் என்னும் பெயர் இரண்டாம் பீமாவுக்கு உண்டு. சீர்ப்புலிநாட்டை அவ்வமயம் ஆண்டு யோதியபெத்தாவைவென்றிருக்கலாம் என்னும் கருத்துண்டு. இவர்கள் சித்தி சோழர்கள் வழித்தோன்றல்கள். இப்போர் கி.பி.1175-இல் நடந்தது.(SII.Vol-VI;N0:249., ARE-No.272A of 1897)சீர்ப்புலிநாடு 12-ஆம் நூற்றாண்டிலும் தொடர்ந்து இருந்தது எனலாம்.

இப்பகுதியிலிருந்து வந்தவர்கள் சீர்ப்புலியர் எனக்கருத இடமுண்டு. இவர்கள் சோழப் படைப்பிரிவினராக பணியாற்றியவர்கள் என்பது வணிக குழு படைப்பிரிவாக அறியப்படும் வணிக்குழு கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது.(Y.Subrayalu-)கொள்ளிடத்தின் தென்கரையில் பந்தலூர் பகுதியில் சீப்புலியூர் என்ற பெயரில் ஓர் உள்ளது.இது வணிகப்படைப்பிரிவோடு தொடர்புள்ளது. சீர்ப்புலியர்எனும் பட்டப்பெயரைக் குடிப்பெயராக கொண்டுள்ளாவர்கள் இன்றும் சோழமண்டலத்தில் வாழ்கின்றனர்.

ஆசிரியர்:

இரா.கோமகன்,

பொறியாளர்

கங்கைகொண்ட சோழபுரம்

 

 

துணைநூல் பட்டியல்:

1.K.A. Neelakandasastri-1955. Page-127-128, 137 of The Colas published by University of Madras.

2.V. Rangacharya-1919. Page.489-90, No.153-156, Chipili, Madanapali taluk of Inscriptions of Madras Presidency. Vol-I, published by Govt.press, Madras.

3.மா. இராசமாணிக்கனார்-1948.பக்கம். 9-11, தமிழ் நாடு வட எல்லை, எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, மெட்ராஸ்.

4.Allan Butterworth & Venugopaul chetty -1905. No.53,85,86,87,115 of pages 427,440,441,443,460 of Inscriptions on Copper plates and Stone in Nellore District. Part-I Published by Supt.Govt. press,Madras.

5.A Gazetteer of theNellore District in the Madras Presidency brought up to 1938 published by Govt.Press,Madras- Chapter-II page.32-52

6E. Hultzsch-1892: பக்கம்.372 South Indian Inscriptions Vol.2.part-III, Supplement to the First and Second volumes.

7.பல்லவ செப்பேடுகள் முப்பது-1999; பக்கம்.115-117, உதயேந்திரம் செப்பேடு.வெளியீடு தமிழக வரலாற்றுக் கழகம்.சென்னை..

8.H. Krishnasastri-1929; No.109. Page 243 South Indian Inscription.vol. -III. part-III.

9.கே. சத்தியமூர்த்தி-1991: பக்கம்.87-89 of Medieval Indian Culture and Political Geography.Published by Ashish Publishing House, New Delhi.

10.E. Hultzsch-1912: No.35Part- 337 (Melpadu copper plate) Epigraphia Indica-XI. (1911-12)

11.ANNUAL Report on Epigraphy: No.299 of 1905

  1. சதாசிவப்பண்டாரத்தார்-1958: பக்கம்.46, பிற்கால சோழர் சரிதம்.வெளியிடு அண்ணாமலைகப்பல்கலைக்கழகம். சிதம்பரம்.

13.G.V. Srinivasarao-1952: No.149 in Page 78 of South Indian Inscription.Volume-XIII. (ARE.No.79 of 1921)

14.Yashoda Devi-1993: Page.156. History of Andhra Country.1000AD -1500AD.,ISBN:81-212-0438-0 published by Gyan Publishing House. Delhi.

15.Y. Subrayalu- Erivirappattinam Warriorsand the State in Medieval South India.

16.EarlyHistory of Andhra country by K. Gopalachari -1941.published by University of Madras.

  1. History of South India. KA neelakanta shastri. In 19 nought 5. Published by Oxford University Press, London.

18.தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் – டாக்டர்.கே.கே.பிள்ளை.(பக்கம்-209)-2002.வெளியிடு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.சென்னை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*